Mittwoch, 28. Dezember 2016

என்னால் அழ இயலவில்லை தம்பி!

என் இனிய இலக்கிய நண்பரும் இதயம் நிறை உடன்பிறவா தம்பியுமான அமரர் இராஜன் முருகவேல் (சோழியான்) அவர்களுக்கு எனது இதய அஞ்சலிகள். 

                                                                                                                       -எழிலன்
                                                                                                                       (செர்மனி)








என்னால் அழ இயலவில்லை தம்பி!

 - சிந்தனைச் செல்வர் எழிலன்

நீர் மறைந்ததாய் முகநூலில் செய்தி பார்த்தேன்!
நீர்தானா நடக்குமா என அதிர்ந்தேன்!
நீர் என்னைத் தொடர்புறா நாட்கள் நீள..
நீரென்மேல் ஏன்கோபம்? வியந்திருந்தேன்!
நிரந்தரமாய் நீர் பிரிவீர் எனத் தெரிந்தா
தொடரமைதி காத்தென்னை விட்டிருந்தீர்?
நிரந்தரமாய் அதைநினைந்தே நோவதற்கோ
இறுதிவரை இறைவனுமே தடுத்ததென்ன?

ஆழ்கடலுள் முத்துண்டு என்று சொன்னார்
ஆழ்மனதுள் அதைத் தேட முயன்றதில்லை
ஆழ்மனதுள் உம்மிடத்தில் முத்துஉண்டு
உம்மெழுத்தில் உம்கருத்தில் நானுணர்ந்தேன்
தாழ்மனங்கள் புடம்போட்டுஉம் படைப்பில்
நீரளித்த முத்துக்கள் எத்தனையோ
பாழ்மனமும் வீழ்மனமும் நிமிர்ந்துநிற்க
நீர்கொடுத்த முத்துக்கள் அத்தனையும்!

தமிழமுதம் எனும் இணையம் நீர் அமைத்தீர்!
தமிழர்க்கே நல்லதுபல நீர்தொடுத்தீர்!
தமிழர்கள் திசையெங்கும் தமிழ்படர
என்போன்றே பலரழைத்து வழியமைத்தீர்!
தமிழினிக்கத் தொலைபேசி மணிக்கணக்கில்
தம்பிநீர்போல்எவருமென்றும் கதைத்ததில்லை
தமிழுலகில் எனதுபெயர் பரவலாகப்
பலரறிய உமது தமிழ் அமுதம்போலெதுவுமில்லை!

பூவரசும் உம்பணியால் மகிழ்ந்ததுண்டு
முத்தமிழ் யாழ் இணையங்களும் நிமிர்ந்ததுண்டு
நூல்பணியும் பத்திரிகை இணையமென
நும்பேனை வடிவமைக்கா இடமுமில்லை
ஊரடங்கும் நள்ளிரவில் மணியடிக்கும்
மணித்தமிழால் எனையழைத்து நீர்கதைப்பீர்
ஊர்க்கதைகள் சுற்றிவரும் அனுபவங்கள்
கலந்துபேசிக் கருத்துரைத்து மகிழ்ந்திருப்போம்!

வரும் போகும் நிற்கும் நகரும் என்பதெல்லாம்
காலத்தால் ஆகும் மாற்றம் நாம்அறிவோம்
தரும் நட்பில் நல்ல நட்பைத் தகர்த்தெடுத்துப்
பறித்திடல் யாரின் சாபம் நாமறியோம்
வருங்காலக் கனவுகள் கலையாத காலையில்
காலனின் காலடி இராஜனை நெருங்கியமை
தருகின்ற கவலையைக் கவிதையாய் வடிப்பதே
இதயத்தைப் பிழிகின்ற துயர்தனைத் தருகுதே!

வாழ்ந்திட்ட வரையிலே நல்லதை மட்டும்
வகைசெய்து இலக்கியம் படைத்திட்ட தம்பி
வாழ்பவர் வாழவே வரப்போகும் மக்கள்
யாவரும் உம்எழுத் தின்வழி கண்டே
வாழ்வார்கள் நல்வாழ்வு நம்பிநீர் செல்வீர்!
வலிதரும் துயரோடே உறுதியாய்ச் சொல்வேன்
வாழ்வாங்கு வையத்துள் வாழ்கநீர் தம்பி!
என்னாலே அழஇனி இயலாதுதம்பி!






முகம் தெரியாத உறவுகளுக்காக மனம் கலங்குவதும் 
வாழ்வில் சாத்தியமாகிறது. 
***************
உலகப்பந்தின் முன் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தோடுதான் இராஜன் முருகவேல் யாழ் இணையத்தில் சோழியானாக எனக்கு அறிமுகமானார். அது 2001 என்று நினைக்கிறேன். இணையத்துக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த ஆரம்பப் பொழுது. எப்போதும் கருத்தாடல், கருத்து மோதல் என்று நேரம் காலம் பாராது அதே தியானமாய் இருந்து எழுதித் தள்ளினோம். அப்போது யாழ்கருத்துக்களத்தில் எழுதியவைகள் எல்லாவற்றையும் தொகுத்தாலே சில நூல்களை உருவாக்கி விடலாம். இராஜன் முருகவேல் உருவாக்கினார். 

எனது படைப்புகளில் 25 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து „பதியப்படாத பதிவுகள்“ என்ற பெயரில் ஒரு மின்னூலை உருவாக்கினார். அதை 30.10.2004 இல் தனது தமிழமுதம் என்னும் இணையத்தளத்திலும் வெளியிட்டு வைத்தார். இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. தொலைபேசியதுமில்லை. மின்னஞ்சல் தொடர்புகள் கூட இருந்ததாக ஞாபகம் இல்லை. எல்லாம் பொதுவெளியில் பேசிக்கொண்டவைதான்.

இணையம் என்னும் பெருவெளி இன்றெமக்கு பல நட்புகளைத் தந்திருக்கிறது. „அது நட்பே அல்ல, அது உறவே அல்ல“ என்று வாதிடுபவர்களும் உள்ளார்கள்.
எப்படித்தான் யார் வாதிட்டாலும் சோழியான் என்று எம்மால் நன்கு அறியப்பட்ட இணையம் தந்த நண்பன் இராஜன் முருகவேலின் இறப்புச் செய்தி என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. கேட்டதும் ஆற்றாமையினால் புரண்டெழுந்து அழுது புலம்பாவிட்டாலும் மனம் வலிக்கத்தான் செய்தது.

சோழியானுடனான நட்பு கிட்டத்தட்ட 15 வருடங்கள் நீண்டது. ஆரம்பத்தில் நாங்கள் யாழ் கருத்துக்களத்தில் நிறையவே பேசினோம். கருத்திட்டோம். எதிர்வாதம் புரிந்தோம். ஆனாலும் நண்பர்களாகவே இருந்தோம். ஜெர்மனியில் வெளிவந்து கொண்டிருந்த பூவரசு இதழில் இன்னும் இருவருடன் இணைந்து நால்வராக „இனி அவர்கள்“ என்றதொரு நெடுங்கதையும் எழுதினோம். தொடர்ந்த காலங்களில் பிறந்தநாட்கள், பெருநாட்களிலாவது வாழ்த்தைத் தெரிவித்து எமது நட்பை உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தோம்.

இராஜன் முருகவேல் எப்போதும் எழுதிக் கொண்டே இருந்தார். அவரது எழுத்தில் எப்போதும் ஒரு பண்பு இருக்கும். தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இராது. நகைச்சுவை கண்டிப்பாகக் கலந்திருக்கும். இணைய அரட்டைகளை முன்வைத்து எழுதிய அவரது ஐஸ்கிறீம் சிலையே நீதானே... குறிப்பிடத்தக்கது. இன்னும் பல எழுதினார். அவர் தொகுத்து தனது இணையத்தில் வெளியிட்ட ஈழத்துப் பாடல்கள் எண்ணிலடங்காதவை. இன்னும்... இன்னும்… அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

வருந்துகிறேன் சோழியான்! உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

சந்திரவதனா
16.11.2016



















Mittwoch, 21. Dezember 2016

என்ன சொல்லி வாழ்த்த...?!

(கதை, கவிதை,  கட்டுரை, நாடகம், விமர்சனம்  என படைப்பிலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தியவர் திரு இராஜன் முருகவேல் அவர்கள். பூவரசுமீது அவர்கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக அவர் நிறையவே எழுதினார். பூவரசு 10வது ஆண்டு நிறைவு மலருக்கென - 2001 தை இதழில்-  அவர் எழுதிய வாழ்த்துச்செய்தி இது)





என்ன சொல்லி வாழ்த்த...?!


கொஞ்சநாளாக ஒரே தலைச் சொறியல்.
தலையைச் சொறிஞ்சு சொறிஞ்சு ஏற்கனவே கொட்டுண்டுற மயிரோடை இன்னும் கொஞ்சம் சேர்ந்து கொட்டுண்டுற மாதிரி ஒரு பிரமை.
அட.. முடி போனாலும் பரவாயில்லை உதுக்கொரு முடிவு வரவேணும் பாருங்கோ..!

“இஞ்சேருங்கோ.. இஞ்சேருங்கோ!…"
தெனாலி வந்தாலும் வந்தது இதுக்கொண்டும் குறைச்சலில்லை.
இது அன்பான அழைப்பில்லை லேட்டஸ்ட் ஃபாஷனாம் பாருங்கோ..!
“என்னப்பா..? தலையிலை சொடுகு கிடுகு பிடிச்சிட்டுதே..?”

பத்திக்கொண்டு வந்தது.
இசகு பிசகாய்க் கதைச்சால் பேந்து காரியம் அவ்வளவுதான்.
இண்டைக்கு எப்பிடியாகிலும் எழுதிப்போடவேணும். இந்தவட்டைக்குப் புத்தகம் முடிஞ்சுதோ தெரியேல்லை

ஒவ்வொரு முறையும் இப்பிடித்தான்.
பூவரசு ஆண்டுமலருக்கு ஒரு வாழ்த்து எழுதவேணும் எண்டு யோசிக்கேக்க ஏதாவது வந்து குழப்பிப்போடும். இந்தமுறை பத்தாவது ஆண்டு நிறைவுமலர். எழுதவேணும் எப்பிடியும் ரண்டு வரியாலும் எழுதவேணும்  எண்டு வெளிக்கிட்டால் இன்னும் எழுதினபாடாய்க காணேல்லை.
ஏதாலும் ஒண்டு வந்து குறுக்கிடுது...
ரண்டு வரி எழுதவேணும் எண்டு குந்தினபேந்துதான் இந்தத் தலைச்சொறியல் வேலை.
ரண்டு வரியோடை முடிஞ்சுபோற சங்கதியா இது?

ஒருமுறை எனது மதிப்புக்குரிய கவிஞர் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் சொன்னது அப்பதானா நினைவுக்கு வரவேணும்?
"ராஜன் நீர் பல சஞ்சிகைகளில் சிறுகதைகள் எழுதினாலும் பூவரசில் எழுதிற கதையள்தான் நல்லாய் இருக்கிறது.!"

ஏன் அப்படி..?
-எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.

தரமான சஞ்சிகைக்கு எழுதுகிறோமே என்ற பயமா, அல்லது கவிஞர் எழிலன், திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் போன்றவர்களின் ஆக்கங்களுக்கு சோடைபோகக் கூடாதென்ற ஆசையா, அல்லது எனது அபிமான எழுத்தாளரின் கேலிக்கு (அவர் வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும்) ஆளாகக் கூடாதே என்ற விருப்பமா என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இத்தனைக்கும் மேலாக ஒன்றுண்டு என நினைக்கிறேன். அதாவது ஆசிரியர் எனது முகத்துக்காக எனது ஆக்கத்தைப் பிரசுரித்தாலும் அதனால் பூவரசின் தரம் குறைந்துவிடக்கூடாதென்ற அவா என்று கூறலாம்.

வாழ்த்து விசயத்திலும் இந்தப் பிரச்சினைதானுங்க  இடையிலை பூந்து என்ரை தலையைச் சொறிய வைச்சு....
இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ சொடுகே? எண்டும் கேக்கவைச்சு.. மூட் அவுட்!

மற்றநாள் எழுதியே தீரவேணும் எண்டு குந்தினால் அந்தநேரம் பார்த்துத்தானா ரெலிபோன்.

„ஹலோ!“
„என்ன செய்யிறாய்?“
இதுக்கு என்ன பதில் சொல்லுறது?
„இருக்கிறன்!“
„ஒரு இடத்துக்குப் போகவேணும் வாறியே..?“
„இப்ப நேரமில்லை.!“
„வீட்டிலை என்ன செய்யிறாய்? எந்தநேரம் பார்த்தாலும் படுக்கையாக்கும்!“
„இல்லை ...எழுதவேணும்!“
„காயிதமோ?“
„இல்லை ..வேறை!“
“உனக்கு இந்தப் பைத்தியம் உதை எப்பத்தான் விட்டுப்போட்டு உருப்படுற வழியைப் பார்க்கப் போறியோ தெரியேல்லை.. இப்ப வாறியோ இல்லையோ.. ஒருத்தன் வாறனெண்டு சொன்னவன் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேணும்! பேச்சுத் துணைக்குத்தான் கேக்குறன்.!”

ம்.. எழுதி உருப்படாதது..பேசினால் உருப்படுமாம்.
“இல்லை மச்சான் கனபேர் பாவிக்காமை ஆனா ஆவன்னா எழுத்துக்கள் எல்லாம் குவிஞ்சுபோய்க் கிடக்கு. என்னைப்போலக் கொஞ்சப்பேராலும் அதுகள் எல்லாம் அழுகிறதுக்கு முந்திப் பாவிச்சுப் போடவேணும் எண்டு எழுதுறமாதிரி நானும் எழுதவேணும். அதாலை நான் இப்ப வரேல்லை!
- சொல்ல நினைத்ததும் சொல்லாமல் போனதும் இதுதான்
பேந்தென்ன அண்டைக்கும் - மூட் அவுட்.

இண்டைக்கு எப்படியாகிலும் எழுதிப்போடவேணும்.
எப்பிடித் தொடங்கிறது?
தனியொரு மனிதனாக பத்தாண்டுகள் ஒரு தரமான சஞ்சிகையை மட்டுமல்லாமல் தரமான ஆக்கதாரர்களையும் வாசகர்களையும் தக்கவைத்துள்ள செயலைக் குறிப்பிடலாமா? ஒரு தசாப்தத்தை நிறைவுசெய்யும் வேளையில் அதன் மூச்சாகப் பின்னணியில் தசாவதானியாக இயங்கிப் பல்வேறு விசயங்களையும் இலக்கிய நயத்துடன் தரும் ஆசிரியரின் உணர்வு பூர்வமான சேவையில் தோய்ந்த பணியைக் குறிப்பிடலாமா?
எழுத்தாளர்களை மட்டுமன்றி கலைஞர்களுக்கும் களம்தந்து கரம்பற்றி முன்னிறுத்தி நிறைகுடமாக தழும்பாமல் நிலைத்து நிற்கும் மகேஷண்ணையின் தாய்மையுணர்வைப்பற்றி (மன்னிக்கவும் வேறு எப்படிச் சொல்லலாம்) குறிப்பிடலாமா?

„மடையா ...மடையா..!”
என்னைத்தான் ஒருவன் அதட்டி அழைத்தான். 
சோழியான்தான்!
“உதையெல்லாம் எழுதுறதுக்கு முந்தி உன்னைப்பற்றி எழுதடா.. உனக்கு பூவரசு தந்த கௌரவத்தை எழுதடா.. உன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமனத்துடன் தோளில்தட்டிப் புல்லரிக்க வைத்த அந்தப் பிரபலமான எழுத்தாளரைப்பற்றி எழுதடா..உனது கதைகளைப் புத்தகமாக்க என எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது தனது சொந்த அலுவல்களைப் புறந்தள்ளி தனது கைகளால் புத்தமாக்கி வெளியிட்டு உனக்கொரு மகுடம் தந்த அந்தப் பேருள்ளத்தைப் பற்றி எழுதடா.. அந்த உள்ளம் உன்னைப் பொறுத்தளவில் வேறெங்கு சந்திக்கும்?

சோழியான் சொல்லச்சொல்ல எங்கோ ஒரு நெருடல்..
என்னைப்போல எத்தினைபேரைக் கண்டிருப்பார் மகேஷண்ணை!
மறுபடியும் மூட் அவுட்

ம் பொறுத்தது போதும் இதுதான் கடைசி முயற்சி. சோட் அன்ட் சுவீற்றாய் நறுக்கென்று எழுதவேணும்

அந்தநேரம் பார்த்து என்ரை வாரிசு...
„அப்பா பூவரசு எங்கை இளந்தளிர் பாக்கவேணும்!“.
அடடா இளஞ்சந்ததிக்கு பூவரசு செய்த சேவையையும் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஆண்டு விழாக்களிலே மேடையேறி திறமையால் உள்ளம்  கவர்ந்த இளம் கலைஞர்களின் திறமையைக் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஒரு தலைமுறையின் காலத்தைப் பத்தாண்டுகள் என்பார்கள்.
அவ்வாறாயின் பூவரசு ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டது.

இதை எல்லாவற்றையும எழுதி வாழ்த்திறதெண்டால்..
டென்ஷன் டென்ஷன்.. மறுபடியும் மூட் அவுட்டாவதற்குள் ..
„வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என் இதயத்தில் குடிகொண்ட பூவரசே
நீ இன்றுபோல் என்றும் பல்லாண்டு காலம்  வாழ்க வாழ்க!
அவசரமாக நான் எழுதியதைக்கண்டு சிரித்த சோழியானைப் பார்த்தேன்.
„என்ன சொல்லி வாழ்த்த எப்படி வாழ்த்த என்று முழிக்கிறியே அதுதான் புவரசின் சிறப்பு. அதுதான பூவரசின் பெருமை! வெறும் எழுத்துக்களால் அடக்கிவிட முடியாமல் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் வியாபித்து நிற்கும் சஞ்சிகைதான் பூவரசு.“
அவன் சொல்வது உண்மைதான்.
ம்.. மறுபடியும் மூட் அவுட்

இந்த மலருக்கு வாழ்த்தெழுத முடியாவிட்டால் பரவாயில்லை இருபதாவது ஆண்டு நிறைவு மலர் வரும் அப்ப அந்தமாதிரி ஒரு வாழ்த்து எழுதித்தான் தீருவன்.
மறுபடியும் பார்.. அந்த மாதிரி எண்டேக்கைதான் என்ரை நாடகம் ஞாபகம் வருகுது ஜேர்மனியிலை நான் எழுதின முதல் நாடகம் 
அதுக்கும் களம் தந்தது பூவரசுதானே !
இதுக்கு மேலையும் தலையைச் சொறிய ஏலாதுங்க..

-இராஜன் முருகவேல் (சோழியான்)

(பூவரசு 10வது ஆண்டு நிறைவு மலர் - தை 2001- இல் பிரசுரமானது)


 
 அமரர் இராஜன் முருகவேல்
(தோற்றம்: 15.04.1960  மறைவு:15.11.2016)

Samstag, 17. Dezember 2016

எனதன்பு இராஜன்! ஏனிந்த நீள் உறக்கம்?

எனதன்பு இராஜன்!
ஏனிந்த நீள் உறக்கம்?


 


காலன் வகுத்த கணக்கு நம் வாழ்வெனினும்
வேளை இதுவல்ல - விடைபெற்றுப் போவதற்கு!

இந்துமகேஷ் எழுத்துக்கு வாசகன் நான் எனச் சொல்லி
எனைக்காண வந்த அந்த நாளதனை நினைக்கின்றேன்.
அந்தநாள் முதலாக அன்பினால் எனைக்கட்டி
அகமகிழ்ந்த அன்புருவை இன்றிழந்து தவிக்கின்றேன்!

எந்தன் எழுத்துக்கு வாசகனாய் வந்த உந்தன்
ஆக்கத் திறனறிந்து அதிசயித்து நான் மகிழ்ந்தேன்.
கதை, கவிதை, கட்டுரைகள் என விரிந்த எழுத்தாற்றல்
கவியரங்கு, பட்டிமன்றம் எனத் தொடர்ந்த பேச்சாற்றல்
பூவரசு இதழ்களிலும்  மேடையிலும் பொலிந்திருக்க
இராஜன் எனும் படைப்பாளி எழுத்துலகில் வலம்வந்தான்!

இணையத் தளத்தினிலே தமிழ் எழத்துலகம் விரிகையிலே
தமிழமுதம் ஊட்டித் தமிழ்த்தாய்க்கு வளம் சேர்த்தான்
எழுத்தாளர் கலைஞர் என எவரிடத்தும் பேதமின்றி
எல்லோரும் நேசிக்கும்  சோழியான் என வளர்ந்தான்.

பத்தாண்டு மூத்தவன் நான் என்பதனால் அண்ணை என
பாசத்தோடெனை அழைத்துப் பழகிய என் நண்பனவன்
நேசக்குரல் என்னை இனி நெருங்கிவர மாட்டாதோ?
வாசிப்பதற்கென்றும் நேசிப்பதற்கென்றும்
வழியான விழிகளிலே வாஞ்சை இனித் தோன்றாதோ?

உயிரோடு உயிராக உன்னோடு கலந்த உந்தன்
காதல் மனையாளை, கண்மணிபோல் பிள்ளைகளை,
உன்னன்பில் கட்டுண்ட உறவுகளை, நண்பர்தமை
ஆதரவாய் இணைக்கின்ற கரங்கள் இனி நீளாதோ?
நிலையற்ற வாழ்விதென்று நிதர்சனம் உரைத்தாலும்
நீ இல்லை என்றெண்ண நெஞ்சம் மறுக்குதையா!

எழுதியவன் எழுதியதை இனி மாற்றி எழுதுதற்கு
எவர்க்கிங்கு உரிமையுண்டு! எல்லாமே விதிவழியாம்!
உறவின்பின் பிரிவுவரும் உண்மையெனில் அதுபோல
பிரிவின்பின் உறவு வரும்! மறுபடியும் சந்திப்போம்!
மரணமது முடிவல்ல - மனங்களை நாம் தேற்றுகிறோம்!
மறுபடியும் உனைக்காணும் நாள்வரையில் நினைந்திருப்போம்!

மானிடர்கள் இந்தமண்ணுக்கு வருவதற்கும்
மீண்டும் ஒருபொழுது விண்ணுலகம் செல்வதற்கும்
பாதை வகுத்த பரமனவன் திருவடியில்
ஆன்மா இளைப்பாற அன்பனே நீ அமைதி பெறு!
ஆண்டவனை வேண்டி அழுது தொழுகின்றோம்.

ஓம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
 
உன் அன்பில் கலந்த
இந்துமகேஷ்





அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களுக்கு!




மாயமிது வாழ்வெனினும் மரணமது முடிவல்ல!
என் அன்பில் கலந்த நண்பர்
ஊடகச் செம்மல்
அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களுக்கு!

- இந்துமகேஷ் 



அதற்குள் என்ன அவசரம் வந்தது  வீ ஆர். வீ?

கள்ளமில்லா உங்கள் அன்பில் கலந்திருந்த எங்கள் இதயங்களை
வேதனைத் தீயில் வேகவைக்க எப்படித் துணிந்தீர்கள்?

காரணங்கள் ஏதுமின்றி காரியங்கள் எதுவுமில்லை இவ்வுலகில்!
எல்லாவற்றுக்கும் ஏதோவொரு காரணம்
எங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் கூடத்தான்!

வந்து பிறந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து வாழ்பவர்கள்தான்
மாமனிதர்களாக வரலாற்றில் தங்கள் பெயர்பதித்துப் போகிறார்கள்!
அந்த வரிசையில் நீங்களும் இன்று!

என்நாடு, என்மக்கள், என்மொழி என்று
இதயசுத்தியோடு எப்போதும் இயங்கியவர் நீங்கள்!

புலம்பெயர்ந்த பின்னால்
அகதிகளாய் ஆனோமே என்று அழுது புலம்பாமல்
வெளிநாட்டு மோகத்தில் வீழ்ந்து மனம் புரளாமல்
தாயக விடுதலை நோக்கி தளராது பாடுபட்ட
நம்மவர்களில் முன்னவர் நீங்கள்!



எழுதுகோல் ஏந்திய என்போன்றவர்களுக்கு இணையற்ற தோழனாய்-
எதிர்காலச் சந்ததிகளும் தமிழர்களாய் வாழ்ந்திட அரும்பணியாற்றுகின்ற
தமிழாலயத்தின் வடமாநில பொறுப்பாளராய்-
கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்ட பண்பாளராய்-
மாற்றுக் கருத்தாளர்களையும் மாறாத புன்னகையோடு
வசப்படுத்திக் கொள்ளும் மாண்புமிகு மனிதராய்-
ஊணுறக்கம் கருதாது இரவுபகல் பாராது
தாயகத்தின் கனவோடு சலியாது உழைத்திட்ட
உங்கள் விழிகளில் நீளுறக்கம் இன்று நிலையாகிப் போனதேன்?

உடல்நலக் குறைவால் நீங்கள் உயிர் பிரிந்தீர்கள் என்னும் காரணத்தை
நம்புதற்கு கடினம் எனக்கு!

உற்ற நண்பராய் உங்களை நான் உணர்ந்திருந்தேன்!
ஈராண்டின் முன்னே நீங்கள் உங்களை இழந்த உண்மை
நேரிலே கண்டிருந்தேன் - நெஞ்சம் பரிதவித்தேன்!

கண்ணின் மணிபோலும் கலந்திருந்த உங்கள் உயிர்க்
காதல் மனையாளைக் காலன் பறித்த தினம்-
உயிரிழந்த உடலாக உங்களையே நான் அன்று கண்டேன்.



“என்னைத் தனியே விட்டு எங்கும் அவள் சென்றதில்லை
அவளைப் பிரிந்து நானும் அரைக்கணமும்  இருந்ததில்லை
இன்றவளை வி;ட்டுவிட்டு எத்தனைநாள் நானிருப்பேன்
இன்னும் சிலநாளில் என் கதையும் முடிந்துவிடும்!”

-சொன்னதுபோல் கதைமுடித்து  சொல்லாமல் சென்ற உங்கள்
எண்ணத்தின் வலிமைதனை இந்நேரம் உணர்கின்றேன்!

வீட்டை நினைப்பவர்கள் நாட்டை நினைப்பதில்லை
நாட்டை நினைப்பவர்கள வீட்டை நினைப்பதில்லை
- இப்படிச் சொல்பவர்கள் தம்கடமை மறப்பதுண்டு
இரண்டையும் நினைப்பவர்கள் உங்களைப் போல் எவருண்டு?

மனை, மக்கள், மருமக்கள், பேத்திகள் என்றிவரோடு
உறவான நண்பர்கள், சுற்றத்தார்  சூழ்ந்திருக்க
நிறைவான இல்வாழ்வு இறைவன் அளித்த வரம்!

வாழ்கின்றவரை எங்கள் வாழ்வெல்லாம் பிறர்க்கென்:று
சலியாது ஆற்றிநின்ற சமூகப் பணி உங்கள் தவம்!

தாயகத்து உறவுகட்காய் சலியாது உழைத்த உங்கள்
நேயத்தை எங்கள் நெஞ்சங்கள் நினைவில் வைக்கும்!
மாயமிது வாழ்வெனினும் மரணமிது முடிவல்ல
வாழ்ந்திருப்பீர் எம்முடனே - வரலாறாய் என்றென்றும்!

உங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனிடம் மன்றாடும்
உங்கள் அன்பில் கலந்த
இந்துமகேஷ்

பூவரசு கலை இலக்கியப்பேரவை -ஜெர்மனி

வீ.ஆர். வரதராஜா நினைவுகள்! - லெ.முருகபூபதி

திரும்பிப்பார்க்கின்றேன்: 

செய்திகளுக்கான அச்சு ஊடகத்தினூடாக ஒரு செய்தியாளரின் கதை! 
வீ.ஆர். வரதராஜா நினைவுகள்!


வீரகேசரியால்  எனக்குக்கிடைத்த  நண்பர்கள்  அதிகம். ஊடகத்துறையானது   நண்பர்களையும்  எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும்.   ஆனால், பொருளாதார  ரீதியில்தான் சம்பாத்தியம்  குறைவானது. வீரகேசரிக்கு   நூறு  வயது   விரைவில்  நெருங்கவிருக்கிறது.  மகாகவி   பாரதியின்  உற்ற  நண்பர்  வ.ராமசாமி (வ.ரா)  அவர்களும் முன்னொரு  காலத்தில்  இதில்  ஆசிரியராக  பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும்  பிறிதொரு  காலத்தில்  அச்சந்தர்ப்பம்  வந்தது. ஆனால்,  அவர்  சினிமாவுக்கு  வசனம்  எழுதச் சென்னைக்குச்  சென்றமையால்  இலங்கைக்கு  வரவில்லை. கே.பி. ஹரன், அன்டன்  பாலசிங்கம்,  செ.கதிர்காமநாதன்,  கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன்,  நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம்,  சுபாஷ் சந்திரபோஸ்  உட்பட    பலர்  பணியாற்றிய  பத்திரிகை  வீரகேசரி. 

வீரகேசரி குடும்பத்தில் இருந்த  சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.  மின்னஞ்சல் -  இணையத்தள  வசதிகள்  இல்லாத  அக்காலத்தில்  அங்கு பணியாற்றியவர்களின்  வாழ்க்கையை  இன்று நினைத்துப் பார்க்கும்பொழுது    சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும்   சவால்களும்  நெருக்கடிகளும்தான்  நினைவுகளில் வந்து   அலைமோதுகின்றன. அத்தகைய  ஒரு கால  கட்டத்தில்தான்  வரதராஜா  வீரகேசரியில் இணைந்திருந்தார். அவர்   அங்கு  அலுவலக  நிருபராக  பணியாற்றினார்.  எனக்கு வீரகேசரியுடனான  தொடர்பு  1972  இலிருந்து  தொடங்கியது. அப்பொழுது  நீர்கொழும்பு  பிரதேச  நிருபராகவே அங்கு   இணைந்தேன். அதன்பின்னர்  1977  இல்  வீரகேசரியில்  ஒப்புநோக்காளர்   (ProofReading) பிரிவில்  ஏற்பட்ட  வெற்றிடத்தையடுத்து  அதற்கு விண்ணப்பித்து   நேர்முகத்தேர்வில்  தெரிவுசெய்யப்பட்டேன். அவ்வேளையில்  என்னுடன்  தெரிவானவர்தான்  தனபாலசிங்கம். இவர்தான்   பின்னாளில்  வீரகேசரி  ஆசிரிய  பீடத்திலும் அதற்குப்பின்னர்,  தினக்குரலிலும்  இணைந்து, தினக்குரலின்  பிரதம ஆசிரியரானவர்.   அதன்  பிறகு  வீரகேரியின்  வெளியீடான  சமகாலம்  இதழில் ஆசிரியரானார்.  ஆனால்,  சமகாலம்  தற்பொழுது வெளியாவதில்லை   என்று  அறியமுடிகிறது.

வரதராஜாவுடன்  1977  இன்பின்னர்  நெருக்கமாகப்பழகும்  கால கட்டம்  தொடங்கியது. அவர்   எழுதும்  செய்திகளை, நீதிமன்றச் செய்திகளை ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஆசிரிய  பீடத்தில்  நான்  இணைந்த பிற்பாடு   அவர்  தரும்  செய்திகளை செம்மைப்படுத்தியுமிருக்கின்றேன். இந்த   செம்மைப்படுத்தல்  என்பது  ஒருவகையில் TeamWork தான். நிருபர்  எழுதுவார்.  அதனை  துணை  ஆசிரியர்  செம்மைப்படுத்தி (Editing) தலைப்புத்தருவார்.  அதன்பின்னர்  செய்தி  ஆசிரியர் மேற்பார்வை  பார்த்து  அவசியம்  நேர்ந்தால்,  திருத்தங்கள்  செய்வார்.   அதன்பின்னர்  அச்சுக்குச்செல்லும்.  குறிப்பிட்ட  செய்திகளை   அச்சுக்கோர்த்தபின்னர்  ஒப்புநோக்காளர்களிடம்  சென்று முதல் Proof இரண்டாம் Proof பார்க்கப்படும்.   அதன்பின்னர்  பக்க வடிவமைப்பாளர்  செய்தி  ஆசிரியரின்  ஆலோசனைகளுக்கு  அமைய பக்கங்களை   தயாரிப்பார்.  முழுப்பக்கமும்  தயாரானதும் முழுமையான   Page Proof எடுக்கப்படும்.   அதனையும் ஒப்புநோக்காளர்கள்   பார்த்து  திருத்துவார்கள்.  அதன்  பின்னர்  செய்தி ஆசிரியரோ  அல்லது  ஆசிரியபீடத்தைச்சேர்ந்த  ஒருவரோ மேலோட்டமான  பார்வை  பார்த்த  பின்னர்,  மீண்டும் அச்சுக்கூடத்திற்கு   எடுத்துச்செல்லப்படும். அதிலிருக்கும்  பிழைகளையும்  அச்சுக்கோப்பாளர்  அல்லது  பக்க வடிவமைப்பாளர்  திருத்தியபின்னர்  மற்றும்  ஒரு  ஊழியர்  மஞ்சள் நிறத்தில்  அமைந்த  ஒரு  அட்டையில்  அந்த  முழுப்பக்கத்தையும் அழுத்தி  ஒரு  புதிய  வடிவம்  எடுத்துக்கொடுப்பார்.   அதன்பின்னர் அச்சுக்கூடத்தில்   ஒரு  இயந்திரத்துள்  செலுத்தப்பட்டு  அந்த அட்டையில்   பழுக்கக்காய்ச்சிய  ஈயம்  படரவிடப்பட்டு  வளைவான ஒரு  ஈயப்பிளேட்  தயாராகும்.   அனைத்துப் பக்கங்களும்  இவ்வாறு தயாரானதும்   முறைப்படி  அவை  பெரிய  ரோட்டரி  இயந்திரத்தில் பொறுத்தப்பட்டு  பத்திரிகை  அச்சாகும்.   விநியோகப்பிரிவு  ஊழியர்கள்   அதன்பின்னர்  விநியோக  வேலைகளை  ஆரம்பிப்பார்கள்.

இதிலிருந்து   வாசகர்கள்  ஒரு  பத்திரிகையின்  பிறப்பை புரிந்துகொள்வார்கள். இவ்வாறு   வரதராஜா  போன்ற  நிருபர்கள்  எழுதும்  செய்திகள் பலரதும் கைபட்டுத்தான்  வாசகரிடம்  சென்றது.  இது  அந்தக்காலம். ஆனால் இன்று யாவும்  கணினி டிஜிட்டல்  முறைக்கு   வந்துவிட்டன. அத்துடன்  செய்திக்காக  கடுமையாக  உழைக்கவேண்டியதில்லை.  Download Journalism  காலத்தில்  நாம்  இன்று  வாழ்கின்றோம். அதாவது ஏதும் இணையத்தளங்களிலிருந்து பொறுக்கி எடுத்து எழுதும் இதழியல் கலாசாரம் வந்துவிட்டது.

வரதராஜா   அன்றைய  பின்னணியில்  பலரதும்  நண்பராக விளங்கியமைக்கு  அன்றைய  அச்சு  ஊடகத்தொழிலும்  காரணம். அவருக்குபத்திரிகையாளர்கள்,  நிருபர்கள், ஆசிரியர்கள்,  அச்சக ஊழியர்கள் அலுவலகத்தினுள்ளே பெருகியிருந்தனர். அத்துடன்  வெளியே  நீதிமன்ற  ஊழியர்கள், சட்டத்தரணிகள், நீதியரசர்கள்,   அரசியல்  தலைவர்கள், பொதுமக்கள்,  குற்றவாளிகள், சந்தேக   நபர்கள்  என்ற  ரீதியில்  பலருடனும்  பழகும்  சந்தர்ப்பங்கள் அவருக்கு  கிடைத்தன. அதேசமயம்  அவருடைய  முகத்தைப்பார்க்காத  ஆயிரக்கணக்கான வாசகர்கள்,  அவர்  எழுதும்  செய்திகளினால்  வீ. ஆர். வரதராஜா   என்ற   பெயரையும்  நன்கு  தெரிந்துவைத்திருந்தார்கள்.
இவ்வாறு  வரதராஜா  மட்டுமல்ல  பல  பத்திரிகையாளர்களும்  மக்கள்   மத்தியில்  பிரபல்யத்துடன்  வாழ்ந்தார்கள்.

நீதிமன்றச்செய்திகள்   எழுதுவதுதான்   வரதராஜாவின்  முக்கிய பணியாக   இருந்தமையால்,  அவர்  நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும்  இயங்கினார்.  நீதிமன்றச் செய்திகளில் தவறுகள்   நேர்ந்துவிடக்கூடாது. நீதிமன்றங்களில்   நடக்கும்  வாதங்கள்  தமிழ்,  சிங்களம்,  ஆங்கிலம் ஆகிய   மும்மொழிகளிலும்  நடக்கலாம்.  அதனால் செவிக்கூர்மையுடன்  கண்ணும்  கருத்துமாக  இருந்து எழுதவேண்டும். வரதராஜா   பணியாற்றிய  காலகட்டம்  இலங்கை  அரசியல் வரலாற்றில்  நெருக்கடியானது.  1977,  1981,  1983  ஆகிய  காலங்களை   நாம்  மட்டுமல்ல,  முழு  உலகும்  மறக்காது.   1958 வன்செயலுக்குப்பின்னர்     தென்னிலங்கையிலும்  மலையகத்திலும் வாழ்ந்த   அப்பாவித்தமிழ்மக்கள்  உடைமைகளை  இழந்து, அகதிகளாகி  கப்பல்  ஏறியகாலம்.  மக்கள்  தங்கள்  தாயகம்  விட்டு புலம்பெயர்ந்த   காலம்.   இலங்கைக்கு  பொருளாதார  ரீதியில்   60 சதவீதம்   அந்நிய  செலாவணியை  தேடிக்கொடுத்த  மலையக  தோட்டத்தொழிலாளர்கள்  நாடற்றவர்களாக்கப்பட்டதுடன்  இந்தியாவுக்கு   திருப்பி  அனுப்பப்பட்ட  காலம். மலையகத்திலிருந்து  தமிழர்கள்  அகதிகளாக  விரட்டப்பட்டு வன்னிக்காடுகளில்  குடியேறிய  காலம்.  இவை  அனைத்துக்கும் உச்சமாக   தமிழ்  தீவிரவாத  இளைஞர்கள்  ஆயுதம்  ஏந்தியகாலம். அதனால்  சிறைப்பிடிக்கப்பட்ட  இளைஞர்கள்  கொழும்பு  நான்காவது மாடியிலும் -  பூசா,  பனாகொடை  முதலான  பல  இராணுவ முகம்களிலும்  தடுத்துவைக்கப்பட்ட  காலம். இத்தகைய   துன்பியல்  காலத்தில்  மக்களுக்கு  உண்மையான செய்திகளைத்  தரும்  பொறுப்புவாய்ந்த  பத்திரிகையாளராக பணியாற்றியவர்  வரதராஜா.  சுருக்கமாகச் சொன்னால்  கூர்மையான கத்தியின்   மேல்  நடக்கும்  காலத்தில்,  கத்திக்கும்  காலுக்கும்  சேதம்  இன்றி  நடந்து  திரிந்தவர்தான்  வரதராஜா. அச்சுறுத்தல்,   கொலைப்பயமுறுத்தல்,  கடத்தப்படுதல்  என்பன பத்திரிகையாளர்கள்  நாளாந்தம்  சந்திக்கும்  அரசியலாகும்.  இவ்வளவு பிரச்சினைகளுக்கு  மத்தியிலிருந்துதான்  மக்களுக்கு  செய்திகள் கிடைக்கின்றன. அதனால்  ஒரு  பத்திரிகையாளனின்  ரிஷிமூலம்  என்பது  பஞ்சணை மெத்தையல்ல.  அவன்  நடந்து  திரியும்  பாதைகளில் அரசியல்வாதிகளின்  கண்ணிவெடிகள்  இருக்கும்.  அவற்றை எச்சரிக்கையுடன்  கடந்து  செய்தி சேகரிக்கவேண்டும்.

வரதராஜா , வீரகேசரியில்  பணியாற்றிய  காலத்தில்  அரசு  பல அடக்குமுறைச்சட்டங்களை  அமுல்படுத்தியிருக்கிறது. அவசரகாலச்சட்டம்,   பயங்கரவாத  தடைச்சட்டம்,  புலித்தடைச்சட்டம் ஆகியனவற்றுடன்  நீதியரசர்  சன்சோணி  தலைமையில் ஆணைக்குழு,   உட்பட  பல  ஆணைக்குழுக்களை  வைத்திருந்தது. சந்தேகத்தின்பேரில்  கைதாகி  தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள்  பற்றிய  செய்திகள்  வீரகேசரியில்  வருவதனால்,  அவர்களின் பெற்றவர்கள்   உறவினர்கள்  வீரகேசரியை  தொடர்புகொண்டு வரதராஜா   போன்ற  பத்திரிகையாளர்களை  சந்தித்து  உதவி கேட்பார்கள்.    வரதராஜாவும்  தம்மாலியன்ற  உதவிகளை   மனிதநேய அடிப்படையில்  செய்துகொடுப்பார்.  சட்டத்தரணிகளை  சந்திப்பதற்கும் சட்ட   ஆலோசனைகளைப்பெற்றுக்கொடுப்பதற்கும்  அவர்  பலருக்கும் உதவியிருப்பதை  பார்த்திருக்கின்றேன்.
அந்த வகையில்  வரதராஜா  ஒரு  மனிதநேய சமூகச்செயற்பாட்டாளராகவும்   இயங்கியவர்.

நாம்  ப ல வருடகாலம்  நண்பர்களாகப் பழகியிருந்தபோதும்  எமது பூர்வீகம்  பற்றி  பரஸ்பரம்  பேசிக்கொண்டதில்லை. வரதராஜா   யாழ்ப்பாணத்தில்  வசாவிளான்   பகுதியில்  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்  வாழ்ந்த  ஆசுகவி  கல்லடி  வேலுப்பிள்ளையின் வழித்தோன்றல்  என்ற  தகவல்  அவருடைய  மரணத்தின் பின்னரே எனக்கு   தெரியவந்தது. ஆசுகவி  கல்லடி  வேலன்  பற்றி  பல  சுவாரஸ்யமான  கதைகள் பதிவாகியிருக்கின்றன.   இவர்  பற்றி  இரசிகமணி   கனகசெந்திநாதன்  தமது  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சி  என்ற நூலிலும்   எழுதியுள்ளார்.  வரதராஜா  வீரகேசரியில்  பணியாற்றிய காலகட்டத்தில்  இணைந்தவர்தான்  ஸ்ரீநடராஜா  என்பவர்.
இவரும்   கல்லடி  வேலனின்  பேரன்தான்.  ஆனால்,  இவர் மாத்திரமே தன்னை  கல்லடி  வேலனின்  பேரன்  என்று மார்தட்டிக்கொண்டிருந்தார்.    அத்துடன்  இவர்,  நாடக, திரைப்படக்கலைஞர்    விஜயேந்திரனின்  தம்பி.   விஜயேந்திரன் எழுத்தாளர்.    இலங்கை   இந்தியத்தயாரிப்பான  சிவாஜிகணேசன் நடித்த   பைலட் பிரேம்நாத்  படத்திலும்  நடித்தவர். ஸ்ரீநடராஜா   மற்றுமொரு  இலங்கை -  இந்தியக்கூட்டுத்தயாரிப்பான ஜெய்சங்கர்   நடித்த  இரத்தத்தின் இரத்தமே  படத்தில்  நடித்திருப்பவர். ஆயினும்,  எந்தவொரு  சந்தர்ப்பத்திலும்  வரதராஜா  கல்லடிவேலன் பரம்பரையில்  தான்  வந்திருப்பதாக பெருமைபேசிக்கொண்டிருக்கவில்லை  என்பதும்  அவருடைய தனித்துவம். வரதராஜா   செய்திகளுடன்  மித்திரனில்  தொடர்கதைகளும் எழுதியவர்.   அவை  இலக்கியத்தரமானதல்ல.  ஆனால்,  அவருடைய வாழ்க்கைத்தேவைகளுக்கு ஊதியம்  தந்தவை.   அத்துடன் அவ்வப்போது   வீரகேசரியில்  பத்தி  எழுத்துக்களும்  எழுதினார்.

1983  இன்பின்னர்  இவரும்  மற்றும்  ஒரு  பத்திரிகையாளரான வீரகேசரியின்  உதவி  ஆசிரியர்  சேதுபதியும்  தத்தம் குடும்பத்தினருடன்  ஜெர்மனிக்கு  புலம்பெயர்ந்தனர். இவர்களுக்காக   வீரகேசரி  குடும்பம்,   கொழும்பு  கொள்ளுப்பிட்டி ரண்முத்து   ஹோட்டலில்  நடத்திய  பிரியாவிடை  விருந்தில்தான் இறுதியாக  சந்தித்தேன். அதன்பின்னர்   சந்திக்கவே  இல்லை  என்பது  மனதை  அழுத்தும்  சோகம். செய்திகளை  எழுதிய  வரதராஜா  இன்று  செய்தியாகிப்போனார்.

letchumananm@gmail.com