பூவரசு சஞ்சிகைக்கு
ஜெர்மனியில் ஓராண்டு விழா
இந்துமகேஷை ஆசிரியராகக்கொண்டு கடந்த ஒருவருடமாக வெளிவந்துகொண்டிருக்கும் பூவரசு இதழின் ஓராண்டு பூர்த்தி விழா அண்மையில் ஜெர்மனியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
”உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்!” என்று பரந்துபட்ட உணர்வுடன் உதயமாகியிருக்கும் பூவரசு, வெளிநாடுகளில் ஆங்காங்கே இலைமறை காயாக இருக்கும் படைப்பாளிகளை, இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

இந்த ஆண்டு தைத்திங்களில் (17.01.1992 ) பூவரசு ஓராண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக கலை இலக்கிய விழாவொன்றினை ஒழுங்கு செய்திருந்தது
பெருந்திரளான வாசகர்களும் ஆதரவாளர்களும் கலைஞர்களும் பங்குகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். திரு வீ.ஆர்.வரதராஜா அவர்களிடம் பூவரசு ஆண்டுமலரின் முதற்பிரதி வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவரது சிறப்புரையைத் தொடர்ந்து எங்கள் தமிழ், வாழும் தமிழ், வெளிநாடுகளில் தமிழ்ச் சஞ்சிகைகள், பூவரசு பற்றி ஒரு பார்வை, பாலர் தமிழ் என்னும் தலைப்புக்களில் முறையே திருமதி ஞானேஸ்வரி கந்தசாமி,திருமதி பத்மினி பரம், திருமதி சித்திரா மணிவண்ணன், திரு, ஜோர்ஜ், திரு இரா.உதயகுமார், செல்வன் வினோத் விஜயரட்னம் ஆகியோர் உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவரது சிறப்புரையைத் தொடர்ந்து எங்கள் தமிழ், வாழும் தமிழ், வெளிநாடுகளில் தமிழ்ச் சஞ்சிகைகள், பூவரசு பற்றி ஒரு பார்வை, பாலர் தமிழ் என்னும் தலைப்புக்களில் முறையே திருமதி ஞானேஸ்வரி கந்தசாமி,திருமதி பத்மினி பரம், திருமதி சித்திரா மணிவண்ணன், திரு, ஜோர்ஜ், திரு இரா.உதயகுமார், செல்வன் வினோத் விஜயரட்னம் ஆகியோர் உரையாற்றினர். 
தமிழர்தம் கலை கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விழா பல்சுவை அம்சங்களைக் கொண்டிருந்தது.
திருமதி சாந்தராணி பத்மகுமார் தயாரித்து வழங்கிய சிறுவர் அபிநயப் பாடல்கள், சிறுமியர் நடனம் என்பன விழாவிற்கு வருகை தந்திருந்த ஜெர்மானியர்களையும் பெரிதும் கவர்ந்தன
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சிலம்பு என்னும் தலைப்பில் வில்லிசையாக வழங்கினர் யாழ்.நாச்சிமார் கோயிலடி ராஜன் வில்லிசைக் குழுவினர்.
(ஜெர்மனியில் முதற்தடவையாக வில்லிசை மேடையேறியது இவ்விழாவில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.)

”புதுயுகம் நோக்கி இனிப் புறப்படுவோம் வாருங்கள்” என்னும் தலைப்பில் கவியரங்கு இடம்பெற்றது.
ஒற்றுமை உணர்வைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இடம் பெற்றன. இளங்கவிஞர்கள் திரு யோகநாதன்,செல்வன் விக்கினேஷ், செல்வன் குமரேசன், திருமதி கௌரி கணா, திருமதி சசிகலா தேவராஜா ஆகியோர் கலந்துகொண்ட இக்கவியரங்கிற்கு கவிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.

”அயல் நாடு போயிருந்த அண்ணை இப்ப திரும்பி வாறார்!” என்னும் தாளலய நாடகமும் இடம் பெற்றது.
இந்துமகேஷ் எழுதிய தமிழ்க் கீதங்கள் சிலவற்றை திரு பால சுப்பிரமணியம், திருமதி வசந்தா புவனேந்திரன், திருமதி சித்திரா மணிவண்ணன், செல்வன் பிரசன்னா மகேஸ்வரன் ஆகியோர் இசை விருந்தாக தந்தனர்.

ஆக மொத்தத்தில் இயல் இசை நாடம் என்கின்ற முத்தமிழ் விழாவாக இவ்விழா அமைந்திருந்தது.
(பூவரசு மூலம் தமிழ்ப் பணியாற்றும் இந்துமகேஷ் தற்போது பிறேமன் கலாச்சார நிலையத்தில் பணியாற்றிவருவதுடன் பிறேமனிலுள்ள பொது நூலகத்தில் தமிழ்ப் பிரிவொன்றை உருவாக்குவதற்குப் பெரிதும் உழைத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது பிறேமன் நூலகத்தில் நூற்றுக் கணக்கான தமிழ்நூல்கள் தமிழ்வாசகர்களுக்கு மகிழ்வூட்டி வருகின்றன.)
(தகவல் - எஸ்.கந்தசாமி)
நன்றி> வீரகேசரி - மாசி 1992

புகைப்படங்கள்
புகைப்படக் கலைஞர்- ”ஜெகா” எஸ்.தேவராஜா.
புகைப்படங்கள்
புகைப்படக் கலைஞர்- ”ஜெகா” எஸ்.தேவராஜா.

























