Donnerstag, 25. September 2014

பூவரசு- கவிதைப் பக்கங்கள் -3




பூ



இறைவன் படைப்பு-
மனிதன் பிறப்பு!
இறைவன் படைத்தான்
மனிதனுக்காய் பல படைப்பு
படைப்பிலும் பலரிடம் உள்ளது
வேற்றுமை வெறுப்பு
படைபலம் கொண்டு
நம் மண் பறித்திடவே
பகைவர்கள் எடுத்தது
படை எடுப்பு

எங்கள் நாட்டிலே
உள்ளதோ இரு இன சேர்ப்பு
இதில் நாம் சிறுபான்மையினராம்
என்றவர் சொல்லித் தள்ளினர் புறம்பு
தமிழர்க்கு உரிமைகள் மறுப்பு
சிங்களம் நமக்குத் திணிப்பு
கல்வியில் விகிதாசாரம்
என்னுமோர் பகுப்பு
கண்டதும் கொண்டோம்
நாங்கள் அங்கு மனக்கொதிப்பு

எழுந்தது இளைஞர் தம்
நெஞ்சினில் உணர்ச்சித் துடிப்பு
எங்கணும் ஒலித்தது எம்மவர்
விளைத்த போர் வெடிப்பு
போரினில் தமிழர் தம்
வாழ்வினில் விளைந்தது பாதிப்பு
புகுந்தது எங்கள் உடமையைவிட்டு
இடம் பெயர்ப்பு

மண்ணுக்கென்றே தம்
உயிரினைத் தந்தவர் நினைப்பு
வாழும்வரை எங்கள்
சந்ததிக்கே ஆழப்பதிப்பு
மானிடர் அனைவர்க்கும்
நிச்சயம் ஓhநாள் இறப்பு
மண்ணுக்கென்றே தமைத்
தந்தவர் கொள்வர் நற் சிறப்பு
விடியலுக்கே தமிழ்
நெஞ்சங்கள் கொண்டது விழிப்பு
விடியும் வரை
போரிடுவோம் அதுநம் பொறுப்பு


புஷ்பராணி ஜோர்ஜ்

(பூவரசு 1991 பங்குனி - சித்திரை இதழில் வெளியானது)

Keine Kommentare: